மணல் கயிறு 2 திரைவிமர்சனம்

Posted Date : 23-Dec-2016
1982-ஆம் ஆண்டு விசுவின் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் "மணல் கயிறு'.  தற்பொது இதையே இன்றைய காலத்துக்கு ஏற்ற விதத்தில் மாடர்னாக மாற்றி 34 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்கள்.

இந்தா பாருங்கோண்ணா இந்த லோகத்துல இளம் பெண்கள் திருமணம் குறித்து பலவித எதிர்பார்ப்புகளுடன் வாழ்கின்றனர். ஆனால் அவர்களின் மண வாழ்க்கை அவர்கள் நினைத்தபடி நடக்கிறதா என்றால அதற்கு பலரிடம் விடை கிடைக்காது. இந்த விடையைதான் எஸ்.வி.சேகர் மற்றும் விசுவின் கூட்டணி இந்த படத்துல காமெடி கலந்து டக்கராக கூறியிருக்கிறார்கள்.

எஸ்.வி.சேகரின் மகள் பூர்ணா தனக்கு கல்யாணமே வேண்டாம் என்று நினைக்கிறார். மகளுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டுமென எஸ்.வி.சேகர் மாரடைப்பு வந்ததுபோல நடித்து தன்னுடைய கடைசி ஆசையை நிறைவேற்றி வைம்மா என்று பூர்ணாவை  திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வைக்கிறார். ஆனால் தனக்கு வரப்போகும் கணவன் பற்றி 8 கண்டிஷன் போடுகிறார் பூர்ணா. இந்த 8 கண்டிஷனுக்கு யார் ஓகே சொல்றாங்களோ அவங்கள நான் கல்யாணம் செஞ்சுக்கிறேன்னு சொல்லிபுடுது இந்த புள்ள.

மாப்பிள்ளையை தேடி தேடி பேப்பர்ல விளம்பரம் கொடுத்து இண்டர்வியூ எடுக்கிறார் எஸ்.வி.சேகர். இதில் சாம்ஸ் எப்படியோ செலக்ட் ஆகிவிடுகிறார். இந்த விஷயம் அறிந்த நாரதர் விசு அவருடைய விளையாட்டை மீண்டும் 34 வருடம் கழித்து எஸ்.வி.சேகரிடம் ஆரம்பிக்கிறார். பூர்ணாவின் அம்மாவான ஜெயஸ்ரீயின் அண்ணன் மகன் அஸ்வினை பூர்ணாவுக்கு திருமணம் செய்து வைத்து விட்டுபோன சொந்தத்தை சேர்த்து வைக்க நினைக்கிறார் விசு.

நினைத்தபடியே பூர்ணா போட்ட 8 கண்டிஷனுக்கு ஏற்ற வகையில் நடித்து பூர்ணாவை திருமணம் செய்து கொள்கிறார் அஸ்வின். அதன்பின் ஒவ்வொரு உண்மையாக பூர்ணாவுக்கு தெரியவருகிறது. பிறகு இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்கங்கள்தான் படத்தின் க்ளைமேக்ஸ்.

அஸ்வின் சேகர் முந்தைய படங்களைவிட இந்த படத்தில் நடிப்பும், டான்ஸும் ரொம்பவே அதிகமாகியிருக்கிறது. அப்பாவை போல இவரும் டைமிங்கில் ரைமிங் காமெடி அடித்து க்ளாப்ஸ் வாங்கிவிடுகிறார். வாழ்த்துகள் அஸ்வின்.

பூர்ணாவின் ரீ-எண்ட்ரி படமாகத்தான் இதை எடுத்துக் கொள்ள முடிகிறது. லேட்டாக வந்தாலும் பயபுள்ள நச்சுன்னுதான் வந்திருக்கு. படத்துல இந்த புள்ள இல்லாத சீன் ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மிங்க... ஏன்னா ஸ்கிரிப்ட் அப்படி.. இரண்டாம் பாதி மொத்தமும் இந்த பொண்ணு மண்டையில தானே வந்து விடியுது. ஆனா ஓவர் ஆக்டிங் பண்ணாம கதையோட வைபரேஷனை பக்காவாக புரிந்து கொண்டு நடித்திருக்கிறார். 

எஸ்.வி.சேகர் இஸ் பேக் என்றுதான் சொல்லனும். ஆங்காங்கே இவர் அடிக்கும் டைமிங் காமெடி இருக்கே... ப்ப்ப்ப்ப்ப்பா... அதை இவரை தவிர யாராலும் செய்யவே முடியாது. தமிழ் சினிமா இப்பவும் உங்கள எதிர்பார்த்துட்டு இருக்கு சார். தொடர்ந்து நாடகம் மாதிரியே படமும் நடிச்சா நல்லா இருக்கும்ல.

விசு - சினிமாவைவிட்டு கொஞ்சம் விலகியே இருந்தாலும் எஸ்.வி.சேகர் அழைத்தார் என்பதால் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் வந்து நடிச்சு கொடுத்திருக்கீங்க. அதுவும் அவருக்கே உரிய வசனத்துடன் “துட்டு கொடுத்து பிரியுறதுக்கு பதிலா... விட்டு கொடுத்து சேர்ந்து வாழலாமே” என்ற யோசிக்க வைக்கும் வசனங்கள் படத்தில் ஏராளம்... இவருக்கு திரையில் காட்சிகள் கம்மி என்றாலும் படத்தோட பைனல் டச்சு இருக்கே... அடடே... நல்ல குரு - நல்ல சிஷ்யன்...

இசை தரண் குமார் ”அடியே தாங்கமாட்டேனே” மற்றும் “முதல் மழை” பாடல்கள் இன்னும் சில மாதங்களுக்கு ஊரெங்கும் ஒலியும், ஒளியுமாக கேட்கப்போவது உறுதி. பட்டைய கிளப்புது பாஸு... பின்னணியும் காமெடிக்கு பொருத்தமாகவே கொடுத்திருக்கீங்க. ஒளிப்பதிவு கோபி வாழ்த்துகள்.

இயக்கம் மதன் குமார் எப்பவுமே பழைய படத்தை ரீமேக் செய்றேன்னு பலர் அந்த படத்தோட மரியாதையை குழி தோண்டி கண்ணம்மாபேட்டையில் புதைத்துவிட்டுதான் வருகிறார். இதில் தப்பித்தது சில படங்களே அந்த வரிசையில் ”மணல் கயிறு 2” படத்துக்கு மேலும் ஒரு பாராட்டுகள்.

மொத்தத்தில் மணல் கயிறு 2 - சிரிப்புல சின்னா பின்னமாகி வலிக்கப்போவுது உங்க வயிறு. காமெடி எண்டர்டெய்னர்...

- ஸ்ரீனி...

Find us on Facebook