பறந்து செல்ல வா சினிமா விமர்சனம் - Parandhu Sella Vaa Movie Review

Posted Date : 10-Dec-2016

சிங்கப்பூரில் வேலை கிடைத்த சந்தோஷத்தில் ஜாலியாக புறப்படுகிறார் நாயகன் லுத்புதீன். காதலித்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார். இதனால் இவர் பார்க்கும் பெண்கள் அனைவரிடமும் “ஏங்க நான் முடிவு பண்ணிட்டேன் நீங்கதான் என்னோட லைஃப்” என ஜ லவ் யு சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சிங்கப்பூரில் சதீஷுடன் ஒரே வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்குகிறார். இதே வீட்டில் ஆனந்தி, ஜோ மல்லூரி மற்றும் இன்னொரு பெண் தங்கியிருக்கிறார்கள். வீட்டுக்கு வந்த ஒரே வாரத்தில் அந்த இரண்டு பெண்களிடமும் ஐ லவ் யு சொல்லி மொக்கை வாங்குகிறார் லுத்புதீன். தன்னை கலாய்க்கும் இவர்களின் வாயை அடைக்க ஒரு ஐடியா செய்கிறார். ஒரு சீன பெண் தன்னை காதலிப்பதாக பொய் சொல்லி இதற்காக ஒரு சீன பெண்ணின் புகைப்படத்தை இவர் பயன்படுத்திக் கொள்ள கடைசியில் அதுவே அவருக்கு ஆப்பாக வந்து முடிகிறது.

சென்னையில் இருக்கும் லுத்புதீனின் பெற்றோர் இவருக்காக ஒரு சிங்கப்பூர் வாழ் தமிழ் பெண்ணை பேசி முடிக்கிறார்கள். அவர்தான் ஐஸ்வர்யா, இவரும் திருமணத்திற்கு முன்பு ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார். பெற்றோர் வற்புறுத்தலால் ஐஸ்வர்யாவை சந்திக்க செல்லும் லுத்புதீன், ஐஸ்வர்யாவை பார்த்தவுடன் காதலில் விழுகிறார். இருவரும் ஜாலியாக சிங்கப்பூரை சுற்றிக் கொண்டிருக்க திடீரென இவர் காதலிப்பதாக சொன்ன சீன பெண் நரேலி கெனங் இவர் முன் வந்து நிற்கிறார். அதிச்சியின் உச்சத்துக்கு செல்லும் லுத்புதீன் அந்த சீன பெண்ணிடமிருந்து எஸ்கேப் ஆகிறார். ஒருபக்கம் ஐஸ்வர்யாவுடன் திருமணம், இன்னொருபக்கம் நரேலி கெனங்க்ன் காதல் என இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொள்ளும் நாயகன் லுத்புதீன் இறுதியாக யாருடன் சேர்கிறார் என்பதுதான் க்ளைமேக்ஸ்.

பிரபல சிங்கப்பூர் தமிழ் சேனலுக்கு ஒரு கதை எழுதி தருவதாக சொல்லி அட்வான்ஸ் வாங்கிவிடுகிறார் கருணாகரன். கதையும் இல்ல, அட்வான்சும் திருப்பி தர முடியாத நிலை. இவரின் அறிமுக காட்சியே லிஃப்டில் ஒருவரிடம் அடிவாங்குவதுதான் இதனை பார்க்கும் லுத்ஃபுதீன் இவரை ஏற இறங்க பார்த்துவிட்டு நீங்க தமிழனா என்று கேட்கிறார். “தமிழன் தான் எங்க போனாலும் அடிவாங்குறான் என கருணாகரனை பார்த்து கூற அதற்கு அவர் இதே தமிழன் தான் அடிவாங்குறதை வேடிக்கை பார்த்துட்டும் போறான்” என கூறும்போது சிரிக்க வைத்தும் சிந்திக்க வைத்துமிருக்கிறார் இயக்குனர்.

லுத்ஃபுதின் மற்றும் ஐஸ்வர்யா அவர்களின் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். முதல் முறையாக ஒரு மாடர்ன் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாவை பார்ப்பது கொஞ்சம் அப்படி இப்படின்னு இருந்தாலும் நம்மை ஏற்றுக் கொள்ள வைக்கிறார். நரேலி கெனங்கிற்கு நிஜமாகவே தமிழ் தெரியுமா? தெரியாதா? வாய்ஸ் மேட்ச் அவ்வளவு அற்புதமாக கொடுத்திருப்பது ஆச்சர்யபடுத்துகிறது. 

ஆர்.ஜே.பாலாஜி - பேஸ்புக், யுடியூப், டிவிட்டர் என சமூக வலைதளங்களில் ஃபேக் ஐடிகளை உருவாக்கும் அண்டர்வேல்ட் ஆபீசை நடத்தி வருகிறார். ஒரு படத்தோட டிரெய்லருக்கு 1 மில்லியன் ஹிட்ஸ், 2 மில்லியன் ஹிட்ஸ் எப்படி கொண்டு வருவோம் தெரியுமா எல்லாமே ஃபேக் க்ளிக்ஸ்தான் என உண்மையை அசால்டாக கூறிவிட்டு சென்றுவிடுகிறார் ஆர்.ஜே.பாலாஜி.

மேலும் ஆனந்தி, சுகன்யா, ஜோ மல்லூரி ஆகியோரும் அவர்களது கதாபாத்திரத்தை திரன்பட செய்திருப்பது படத்திற்கு பலமாக இருக்கிறது. 

இசை ஜோஷ்வா ஸ்ரீதர் “நம்ம ஊர் சிங்காரி” ரீமேக்ஸ் மற்றும் “நதியில் விழுந்த...” ஆகிய பாடல்கள் இளைஞர்களின் நாடியை சுண்டி இழுக்கும் வகையில் இருப்பது படத்திற்கு பலம். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார்.

ஒளிப்பதிவை நிச்சயமாக பாராட்டியாக வேண்டும், சிங்கப்பூரின் சந்து பொந்துகளிலும் நம்மை கூட்டி சென்று அருமையான உணர்வை ஏற்படுத்துகிறார். உண்மைய சொல்லனும்னா இத்தனை வருட சினிமாவில் சிங்கப்பூரை இந்தளவுக்கு அழகாக யாரும் காட்டியதில்லை என்று கூறலாம்.

இயக்கம் தனபால் பத்மநாபன் “நீ லவ் பண்ற பெண்ணை கல்யாணம் செய்வதைவிட, உன்னை லவ் பண்ற பெண்ணை கல்யாணம் செய்துகொள் உன் வாழ்க்கை சொர்க்கமாக மாறும் என்பதைதான் அழகாகவும், காமெடியுடனும் கூறியிருக்கிறார் இயக்குனர் தனபால் பத்மநாபன்.

மொத்தத்தில் பறந்து செல்ல வா - சுற்றுலா சென்று வந்த மகிழ்ச்சி

Tamil News Update

Find us on Facebook